Skip to content
Home » திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Senthil

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று  வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி. ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெய்ன் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே.

இந்த முதலீடுகளை, திமுக அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.

2019-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம், 35,520 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக் கருத்தைக் கூறியுள்ளார்.

எனது தலைமையிலான அரசில், தொழில் துறையில் பணியாற்றியவர்கள்தான், தற்போது ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். எனது தலைமையிலான ஆட்சியில் தொழில்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த அருண்ராய், இந்த ஆட்சியில் தொழில்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அன்றைய தொழில்துறை செயலாளராக இருந்த முருகானந்தத்தை, ஸ்டாலின் தொடர்ந்து தொழில்துறை செயலாளராகவும், நிதித் துறை செயலாளராகவும், தனது செயலாளராகவும் பணியமர்த்தியதுடன், தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் நியமித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதைக் கேட்டுத் தெரிந்திருந்தால் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்க மாட்டார்.

இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளைஅறிக்கையை வைக்க மறுக்கிறார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!