நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் பதிலை கோரியும், விரிவான விவாதம் நடத்தக்கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. இதனால் இரு அவைகளும் கணிசமாக முடங்கின. இதற்கிைடயே மணிப்பூர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. அதை சபாநாயகரும் ஏற்று இருந்தார்.
மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானமும் மக்களவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மக்களவை அலுவல் ஆய்வுக்குழு இந்த தீர்மானம் மீதான விவாதத்துக்கு 12 மணி நேரம் ஒதுக்கி உள்ளது. விவாதத்துக்குப்பின் பிரதமர் மோடி 10-ந்தேதி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் இன்று (திங்கட்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
முக்கியமான அலுவல்களால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இந்த இறுதி வாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் இருக்கும் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பரிசீலித்தால் அவரது பதவி எப்போது திரும்ப வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பும் எதிர்க்கட்சியினரிடையே நிலவி வருகிறது.
இன்று பரிசீலிக்கப்படாவிட்டால், ராகுல் காந்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவார் என்றும் கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டால், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுவதற்கு அவரை முக்கியமாக பயன்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.