காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் இன்று(திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு 3 நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு நீர் வளஆதாரத்துறை வெளியிடும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் விரைவாக கல்லணையை வந்து அடைந்தால் வருகிற 15-ந் தேதியே தண்ணீர் திறக்கவாய்ப்பு உள்ளது., தண்ணீர் வருவது தாமதம் ஏற்பட்டால் 16-ந் தேதி காலை கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பருவ மழை நல்ல நிலையில் இருந்ததால் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி செய்யப்பட்டு மகசூல் நல்ல நிலையில் இருந்தது.
தஞ்சையில் குறுவை சாகுபடி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் காவிரி பாசன பகுதியில் நடப்பாண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, அதற்கு ஏற்ற வகையில் விதை நெல், உரங்கள் இருப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேட்டூர் அணை திறப்பதையொட்டி கல்லணையில் உள்ள பாலங்களில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கல்லணை பாலத்தில் உள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜன், காவிரி அம்மன், குரு முனிஅகத்தியர், விவசாயி, மீனவ பெண் ஆகிய சிலைகளுக்கு புது வர்ணம் பூசப்பட்டு காட்சியளிக்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் மதகுகளை ஏற்று இருக்கும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்ட பகுதி முழுமையாக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
ஷட்டர்களை இயக்கும் மின்மோட்டார் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு பாதுகாப்பாக மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் வெள்ள காலங்களில் தண்ணீர் பெருகி ஓடும்போது பாலங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் எட்டிப் பார்ப்பது தவிர்க்க எவர்சில்வரில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.