தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது. ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர். இந்நிலையில் ஓசூர் அருகே இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். வீலிங் சாகசம் செய்தபோது நிலைதடுமாறி பைக்குகள் ஒன்றோடொன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
