தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகிறது. கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார். அவரது ஆங்கில பேச்சை, சபாநாயகர் அப்பாவு தமிழில் எடுத்துரைப்பார். அத்துடன், இன்றைய சட்டசபை நிகழ்வு நிறைவு பெறும். கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார். ‘கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது’ என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபம்அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார். பின், ‘வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்; ஜெய்ஹிந்த்; ஜெய் பாரத்’ என்று கூறி, நான்கு நிமிடங்களில் தன் உரையை நிறைவு செய்தார்.கவர்னர் இருக்கையில் அமர்ந்ததும், சபாநாயகர் அப்பாவு எழுந்து, ஆங்கிலத்தில் இருந்த கவர்னர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். உரையை வாசித்து முடித்த பின், அவர் சில கருத்துக்களை கூறினார். கவர்னர் குறித்தும் சில வார்த்தைகளை தெரிவித்தார். அதைக்கேட்ட கவர்னர் சபையிலிருந்து வெளியேறினார். இந்தச் சூழ்நிலையில், வழக்கமான நடைமுறையின்படி சட்டசபையில் உரையாற்ற, அரசு தரப்பில் கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சபாநாயகர் அப்பாவு, கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று, கவர்னருக்கு அழைப்பு விடுத்தார். கவர்னர் உரைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கவர்னர் உரை மீது ஒன்று அல்லது இரண்டு நாள் விவாதம், அதன்பின் முதல்வர் பதிலுரை இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமனம் உட்பட, பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.