023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் பற்றி கூறுகையில், அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிர் உரிமை தொகையில் யார் யார் பயன்பெறுவார்கள் என்ற வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பட்ஜெட்டை முழுமையாக படித்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் முழு நிதிநிலை அறிக்கையை அவையில் இருந்து கேட்டிருக்கலாம்; ஆனால் கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே எடப்பாடி பழனிசாமி கருத்து கூறி வருகிறார்.
சட்டம் ஒழுங்குபற்றி எடப்பாடி அவர்கள் பேசி உள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், பொள்ளாச்சி சம்பவம், கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் எல்லாம் யார் ஆட்சியில் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.