இந்தியாவில் தற்போது கோடை காலம். இதனால் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. காலை 10 மணிக்கே சூரியன் தனது உக்கிரமான கதிர்களை வீசத் தொடங்கி விடுகிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் கடைவீதிகளுக்கு செல்வது மிகவும் குறைந்து விட்டது. அதே நேரத்தில் வெயிலின் கொடூரத்தை தணிக்க ஆங்காங்கே சாலையேரங்களில் தற்காலிக குளிர்பானக்கடைகள், தர்பூசணி பழங்கள் , முலாம்பழம், நுங்கு, பதனீர், மற்றும் பழச்சாறுகள், கரும்பு சாறு , மோர் என பல்வேறு குளிர்பான கடைகள் வந்துவிட்டன.
வெயிலின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க மக்கள் எத்தனை குளிர்பானங்கள் அருந்தினாலும் சிறிது தூரம் செல்லும் முன் வியர்த்து கொட்டி களைப்படைந்து விடுகிறார்கள். எனவே கோடையை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள், பழங்கள் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் அறிவுரைகள் கூறி உள்ளனர். ஆனாலும் வெயில் நேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று இந்தியாவில் மிக அதிகபட்ச வெயில் மேற்குவங்கத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அந்த மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த கட்டமாக ஒடிசாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.