அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேம்புக்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 67 மனுக்கள் பெறப்பட்டு, 40 மனுக்களும் ஏற்கப்பட்டும், 17 மனுக்கள் விசாரணைக்கும், 10 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 181 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்முகாமில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ.30,42,626 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது,
முன்னதாக, இம்முகாமில் சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி பார்வையிட்டார்.
இம்முகாமில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அஜிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் உமா மகேஸ்வரன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி, வேம்புக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.