கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் தையல் இயந்திரம் வழங்குதல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் சலவை பெட்டி வழங்குதல், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பட்டு வளர்ச்சி துறை, தாட்கோ, சத்துணவு, சாலை விபத்து நிவாரணம் உட்பட பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மக்களுடன் முதல்வர் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வருக்கு, கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி பகுதியில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவரின் சிலை மாதிரி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.