தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 3வது முறையாக நாளை (வியாழன்) திருச்சி வருகிறார். காலை9.25 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் முதல்வருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் நேராக திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு முதல்வர் செல்கிறார்.
விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ655 கோடியில் முடிக்கப்பட்ட 5639 பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ரூ.308 கோடியில் 5951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் ரூ.79 கோடிமதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 22,716 பேருக்கு வழங்கும் பணியை தொடங்கி வைப்பதுடன் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வங்கி கடன்களை வழங்குகிறார். மணிமேகலை விருது மற்றும் சிறந்த வங்கியாளர்களுக்கான விருதினையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து11.15 மணிக்கு மொண்டிப்பட்டி செல்கிறார். அங்கு ரூ.1350 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு காகித ஆலை 2வது யூனிட்டை திறந்து வைக்கிறார். அத்துடன் சிப்காட் தொழிற்பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
மதியம் 1.30 மணிக்கு சன்னாசிப்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெறும் 1கோடியே 1வது பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரித்து அவருக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகலில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். விழா ஏற்பாடுகள், மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.
முதல்வர் விழாவில் நாளை கடன் உதவி பெற உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் இன்று காலை விழா பந்தலுக்கு வந்திருந்தனர். அவர்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அடையா பேட்ஜ்கள் வழங்கப்பட்டது.