Skip to content

ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறு சீரமைப்பு நடை பெற உள்ளது. அப்படி சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதே  விகிதாசாரப்படி  தென் மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில்  தொகுதிகள் அதிகரிக்கப்படும் என  கூறி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதகம் ஏற்படுத்தி விடக்கூடாது என திமுக  வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக தென் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள்   அடங்கிய கூட்டு கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் வரும் 22ம் தேதி கூட்டி உள்ளார்.

இதற்காக தென் மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்களை நேரில் அழைக்க திமுக சார்பில் அமைச்சர், எம்.பி அடங்கிய குழு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வகையில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திக்க  நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு,   இளங்கோ எம்.பி. ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் ஐதராபாத் அனுப்பினார்.

அதன்படி அவர்கள் இன்று  ஐதராபாத் சென்று  முதல்வர் ரேவந்த்  ரெட்டியை சந்தித்து , முதல்வர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய அழைப்பிதழை கொடுத்து கூட்டத்தில் பங்கேற்க வரும்படி அழைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர்  கூட்டத்துக்கு வருவதாக கூறினார்.

இந்த சந்திப்பின்போது திமுக எம்.பிக்கள்  கனிமொழி, ஆ. ராசா,  அருண் நேரு,  கலாநிதி வீராசாமி,   டில்லி  பிரதிநிதி  விஜயன் ஆகியோரும் உடனிருந்தனர்.

திமுக பிரதிநிதிகள் சந்திப்பை தொடர்ந்து  முதல்வர் ரேவந்த்  ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் பாஜக தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது.  தென் மாநிலங்களில் பாஜக வளராததால் இப்படி செய்கிறது. எந்த காரணங்களுக்காகவும் தொகுதி சீரமைப்பை நாங்கள் ஏற்க மாட்டோம். இது தொகுதி டி லிமிடேசன் அல்ல ,தென் மாநிலங்கள்   லிமிடேசன்.  நாட்டிற்கு அதிக பங்களிப்பு வழங்குவது தென் மாநிலங்கள்.  தென் மாநிலங்களில் பாஜக வளர முடியாததால் தொகுதிகளை குறைக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக முன்னெடுப்பு   செய்வதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!