ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு இன்று காலை 10.45 மணி அளவில் தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணி அளவில் பிரதமர் மோடி மாநாடு மண்டபத்துக்கு வந்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது மண்டபத்தில் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து மாநாட்டு மண்டபத்துக்கு உலகத்தலைவர்கள் வரத்தொடங்கினர். அவர்களை மாநாட்டு மண்டப முகப்பில் நின்று பிரதமர் மோடி வரவேற்று கைகுலுக்கினார். அதைத்தொடர்ந்து மாநாடு தொடங்கியது. அனைத்து தலைவர்களையும் வரவேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் இந்தியா என்பதை பாரத் என அழைத்தார். அவர் நின்று பேசிய மேஜையிலும் பாரத் என்றே எழுதப்பட்டிருந்தது.
வரவேற்புரையில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஜி 20 மாநாட்டுக்கு வந்துள்ள உலகத்தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவோம். வேற்றுமைகளை நீக்கி ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க வேண்டும். ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்க்க வேண்டும். சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகள் இந்தியாவிடம் தீர்வு தேடுகிறது.
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகமே வியக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டில் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.