உலகம் முழுவதும் உள்ள 100 கோடிக்கும் அதிகமான கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 13வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நாளை (வியாழன்) தொடங்குகிறது. நவம்பர் 19ம்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா , இலங்கை ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் ரூ.33.22 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நாளை அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டியையொட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் பத்து மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி முறையே மும்பை வான்கடே மைதானத்திலும் , கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறும் , இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் .
இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் பிரமாண்ட தொடக்க விழாவில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறும். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி, மற்றும் நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் போட்டிக்கு முந்தைய நாள்(இன்று) கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்கு பதிலாக, நவம்பர் 19 ம் தேதி நிறைவு விழா அல்லது அக்டோபர் 14 ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ஒரு பிரமாண்ட விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நாளை போட்டி தொடங்குவதற்கு முன் 10 அணிகளின் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும். அதைத்தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கள் உலக கோப்பையுடன் மைதானத்தில் வலம் வருவார். பின்னர் போட்டி தொடங்கும்.