ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. வார்னர், மார்ஷ் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். பும்ரா வேகத்தில் மார்ஷ் டக் அவுட்டாகி வெளியேற, ஆஸி.க்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அடுத்து வார்னர் ஸ்மித் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். வார்னர் 41 ரன் (52 பந்து, 6 பவுண்டரி), ஸ்மித் 46 ரன் (71 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். லாபுஷேன் 27, அலெக்ஸ் கேரி (0) இருவரும் ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸி. 29.4 ஓவரில் 119 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. மேக்ஸ்வெல் 15, கிரீன் 8 ரன்னில் வெளியேற, கேப்டன் கம்மின்ஸ் 15, ஆடம் ஸம்பா 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்டார்க் 28 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட, ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, பும்ரா, குல்தீப் தலா 2, சிராஜ், ஹர்திக், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் இஷான், கேப்டன் ரோகித், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி அணிவகுத்தனர். போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் மூட்டையை கட்டிவிட வேண்டியது தான் என நினைத்த நேரத்தில் கோலி கைகொடுத்தார் இந்தி அணிக்கு.
இருவரும் அடுத்தடுத்து அரை சதம் விளாசி அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி 85 ரன் (116 பந்து, 6 பவுண்டரி) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் லாபுஷேன் வசம் பிடிபட்டார். கோலி ராகுல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ஹர்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அபாரமாக விளையாடிய ராகுல் இமாலய சிக்சருடன் வெற்றியை வசப்படுத்தினார்.
இந்தியா 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் 2 புள்ளிகளையும் தட்டிச் சென்றது. ராகுல் 97 ரன் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் டில்லியில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.