இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த 18 வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி ஆசிய கோப்பை போட்டியிலேயே மழையின் கருணையால் வெற்றி பெற்று வருகிறது. இந்த அணி எப்படி உலக கோப்பையை எதிர்கொள்ளும் என்று இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கி விட்டனர். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பதை அனைவரும் ஒரு குறையாக பதிவிட்டு உள்ளனர். அதே நேரத்தில் வழக்கம் போல தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களும் இதில் இல்லை.