Skip to content
Home » உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டில்லி  அருண் ஜெட்லி மைதானத்தில்  இந்தியா_ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம் சத்ரானை 22 ரன்களில் பும்ரா விக்கெட்டாக்கினார். சில நிமிடங்களில் ரஹ்மானுல்லா குர்பாஸை 21 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.

ரஹ்மத் ஷாவை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கிய பின் இணைந்த ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியும், அஸ்மத்துல்லா உமர்சாயும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இக்கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் கடுமையாக முயற்சித்தனர். இறுதியில், அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்திருந்த அஸ்மத்துல்லா உமர்சாயை ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்கினார். இதன்பின்னும் சிறப்பாக விளையாடிய ஷாஹிதி 80 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டாகினார்.

இதன்பின் வந்தவர்களை பும்ரா தனது வேகத்தால் வரிசையாக வீழ்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் குல்தீப் மற்றும் ஷர்துல் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

273 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – இஷான் கிஷன் இணை இம்முறை சிறப்பான துவக்கம் கொடுத்தது. இஷான் நிதானத்தை கடைபிடிக்க ரோகித் ஆப்கன் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். தொடக்கம் முதலே அதிரடியை கையாண்ட அவர், 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அதிரடியை கைவிடாத ரோகித் 63 பந்துகளில் சதம் பதிவு செய்தார். ரோகித்தின் கிரிக்கெட் கரியரில் சாதனை சதமாக இது அமைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித்தின் 31வது சதம் இது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோகித். முதல் இரு இடங்களில் சச்சின் (49 சதம்), விராட் கோலி (47 சதம்) உள்ளனர். அதேபோல், உலகக் கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் (63 பந்துகள்) அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். அதேபோல், இப்போட்டியில் ஐந்து சிக்ஸர்களை அடித்திருந்த ரோகித், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் முந்தினார்.

ரோகித் ஒருபுறம் அதிரடியாக விளையாட, மறுபுறம் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட் ஆனார். ரோகித் – இஷான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. இதன்பின் கோலி – ரோகித் கூட்டணி சிறப்பாக விளையாடியது. எனினும், 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்த ரோகித், ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!