இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதற்கிடையே, இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலக கோப்பை போட்டிகளை நேரில் காண பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.