உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் நேற்று நடந்த பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் மார்ஷ் இணைந்து 259 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிட்செல் மார்ஷ், 121 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர், 124 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தார்.
368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 134 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனை ஆஸ்திரேலியா தகர்த்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். அப்துல்லா 64 ரன்கள், இமாம் 70 ரன்களில் வெளியேறினர். கேப்டன் பாபர் அஸம், 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். சவுத் ஷகில் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் அதன் பின்னர் பாகிஸ்தான் அணி முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறியது. ஷகில், இஃப்திகார், ரிஸ்வான், உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி மற்றும் அஃப்ரிடி ஆகியோர் ஆட்டமிழந்தனர். 45.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 305 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸி தரப்பில் 10 ஓவர்கள் வீசிய ஸம்பா 53 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.