அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களம் இறங்கிய அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் பாண்ட்யா 3, அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர். இதனைத்தொடர்ந்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ரன்னில் கேட்ச் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதனிடையே டி 20 தொடரில் தனது 4 ஆயிரம் ரன்களையும் ரோகித் சர்மா கடந்தார். அதன்பிறகு காயம் காரணமாக ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ரிஷப் பண்டுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பண்ட் 36 (26) ரன்களும், ஷிவம் துபே (0) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் மார்க் ஆதிர் மற்றும் பெஞ்சமின் வொயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.