தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி சதீஷ்குமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் அந்த சிவப்பு சாயம் அதில் தெரியும் என்றும் கூறியிருந்தார். இந்த கருத்து தர்பூசணி விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சதீஷ்குமார் தனது கருத்து தொடர்பாக விளக்கம் தெரிவித்தார். அனைத்து பழங்களிலும் ஊசி செலுத்தப்படுவதில்லை ஒருசிலர் இந்த தவறை செய்கின்றனர் என்றே கூறியிருந்தேன். தர்பூசணி பழம் உடலுக்கு ஆரோக்கியம் தான் என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.