கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட் கட்டிடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்து கிணற்றின் மூலம் ராட்சச மோட்டார் உதவியுடன் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனையறிந்த அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மெய்ஞானமூர்த்தி நீதிமன்றத்தில் அமராவதி ஆற்றுப் பகுதியில் அரசு அனுமதியின்றி வட்டக் கிணறு அமைத்து அதன் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து வருவதை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து ஆற்றுபுறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 2021 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பின்னர் மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி அகற்றிக்கொள்ள உத்தரவிட்டனர் ஆனால் தற்போது வரை அகற்றாததால் நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஸ்டாலின் சுப்பையன் தலைமையில் ஒன்பது இடங்களில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள, தண்ணீர் எடுக்க பயன்படுத்திய ராட்சத மோட்டார்கள் மற்றும் பைப் லைன் ஆக்கிரமிப்புகளை 5 ஜேசிபி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் அகற்றினர். மேலும் சாலை ஓரமாக இரண்டு கிலோமீட்டர் செல்லும் பைப்லைன்களை நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.