சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு நுகர்வோருக்கும் கட்டணம் செலுத்த அட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் அட்டையை பயன்படுத்தி குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்கவும் மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. இணைய வழியிலான கட்டண நுழை வாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் பி.ஏ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.