திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தேவைக்கான தண்ணீரும் வினியோகிக்கப்படாமல் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் இன்றி அதனை ஒட்டி செல்லக்கூடிய இரண்டு சர்வீஸ் சாலைகளிலும் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை நேரத்தில் நடைபெற்று வரும் இந்த திடீர் போராட்டத்தினால் திருச்சி to சென்னை சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் 2 கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நிற்கின்றது.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்கள் எங்களது அத்தியாவசிய தேவைக்கான குடிநீர் விநியோகத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என கூறி தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ போலீசாரோ சம்பந்தப்பட்ட இடத்திற்கு வராததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது