Skip to content
Home » கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது…. அமைச்சர் நேரு பேட்டி

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு  இன்று (01.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் , மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,  கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணைய.எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர்கள்  பிரேமா சுரேஷ் , எலிசபெத் அகஸ்டின் மற்றும் டேங்கர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது: தமிழக முதல்வரின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது பெயரில் உள்ள இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி.  இந்த ஆஸ்பத்திரியில் 91 படுக்கை வசதிகள் உள்ளது. தினந்தோறும் 350 பேருக்கு டயாலிசிஸ் செய்ய முடியும்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது. கடந்த ஆண்டை விட அதிக அளவு நீர்தேக்கங்களில் தண்ணீர் உள்ளது.  மெட்ரோ வாட்டர் வரவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.

எந்த இடத்தில் என சொல்லுங்கள் அங்கு 10 நிமிடத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு 2 கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைப் அமைக்க வேண்டி உள்ளது. அது அமைக்கப்பட்டு விட்டால், தினமும் 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க முடியும்.  பூண்டி, புழல் ஏரிகளிலும் கடந்த ஆண்டை விட கூடுதல் தண்ணீர் உள்ளது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இன்னும்2 மாதத்தில்  சோதனை ஓட்டத்திற்கு வர உள்ளது. அதன் மூலம் தினமும் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்ய முடியும். மழை நீர் வடிகால் பணிகள்  தொடர்ந்து நடந்து வருகிறது.  மாநகராட்சி ஆணையர் இது குறித்து ஒரு திட்டம் தயாரித்து  ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார்.

கொசுக்களை ஒழிக்க  மருந்தடிக்கும் புதிய மிஷின்கள் வாங்கப்பட்டு  செயல்படுத்தப்படுகிறது.வார்டுக்கு 2 எந்திரங்கள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டு  கொசு மருந்துகள் அடிக்கப்படுகிறது.  கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் ட்ரோன்கள் மூலம் மருந்தடிக்கப்படுகிறது. இருக்கிற கருவிகளை பயன்படுத்தி  அறிவியல்பூர்வமாக கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *