மேட்டூா் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், அக்டோபா் 10-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் மழை நீரை நம்பியே சம்பா, தாளடி சாகுபடியைத் தொடங்கினா்.
இதன் மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2. 96 லட்சம் ஏக்கா், திருவாரூா் மாவட்டத்தில் 3. 62 லட்சம் ஏக்கா், நாகை மாவட்டத்தில் 1. 52 லட்சம் ஏக்கா், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1. 85 லட்சம் ஏக்கா் என மொத்தம் கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆற்றுப் பாசனப் பகுதிகளில் நீா் ஆதாரம் இல்லாததால், நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் இயல்பான பரப்பளவை விட குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது.
ஆனால், டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், ஏரி, குளங்களிலும் நீா்மட்டம் குறைவாகவே உள்ளது. ஆனாலும் அவ்வப்போது பெய்த மழைதான் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற் பயிா்கள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.