கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் பிள்ளைகள்2 பேரும் கடலூரில் உள்ள ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்று வந்தனர்.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கோடை விடுமுறைக்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள திருக்குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அண்ணன் திலிப்ராஜ் ஆழமான நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி தினேஷ், அண்ணனைக் காப்பாற்றுவதற்காக முயற்சித்துள்ளார். இந்த முயற்சியில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோடை விடுமுறைக்காக, வீட்டிற்கு வந்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.