Skip to content
Home » லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

  • by Senthil

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும்  பரவிவிட்டது. இஸ்ரேல் கடந்த சில நாட்களான விமானப்படை மூலம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதலில் இதுவரை லெபனானில்700க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். பதிலடியாக இஸ்ரேல் முக்கிய நகரங்களை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இருதரப்பிலும் போர் உக்கிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே லெபனானை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று தெற்கு மற்றும் கிழக்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் ஒரே இரவில் 75 தளங்களை தாக்கி அழித்தது. இரவு முழுவதும் குண்டுமழை பொழிந்தன. பதிலடியாக லெபனானில் இருந்தும் 45 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை அனைத்தும் இஸ்ரேல் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன. இருப்பினும் ஓரிரு ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியதில் அதில் வசித்த மக்கள் பலியானார்கள்.

இந்த நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்த போர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நட்பு நாடுகள் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெளியான கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.

இருதரப்பினரும் இந்த தற்காலிக அழைப்புக்கு பதில் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்த போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஐநா பொதுச்சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இதுபற்றி கூறுகையில்,’ போர் நிறுத்தம் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். நெத்தன்யாகு அமெரிக்கா சென்றாலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்தும், காசாவிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளின் போர் நிறுத்த அழைப்புக்கு ஹிஸ்புல்லா போராளிகளும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

 

இஸ்ரேல் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் பெய்ரூட் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் டிரோன் கமாண்டர் பலியானார். அவரது பெயர் மொகமது உசைன் சூர்.  ஆனால் இந்த தகவலை ஹிஸ்புல்லா குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது:

பிரதமர் நெத்தன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். போரில் வெற்றி வரும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் போரிடும். எல்லையில் இஸ்ரேல் குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது’ என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!