Skip to content

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறியிருப்பது அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவை மீறும் செயல்” என வாதாடினார். அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, “வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரை உறுப்பினராக நியமிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக சேர அனுமதிப்பீர்களா” என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “வக்பு திருத்த மசோதா பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை அளித்தது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது” என்றார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, “100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை வக்பு என அறிவித்ததும், அதை வக்பு வாரியம் கையகப்படுத்தி வேறு விதமாக அறிவிக்கிறது என்று மேத்தா கூறுகிறார்” என்றார். அப்போது குறுக்கிட்ட மேத்தா, “ஒருவருக்கு வக்பு இருந்தால், அதை அறக்கட்டளையாக மாற்ற முடியும். அதற்கான வழிவகை உள்ளது” என்றார். அப்போது, “கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது” என தலைமை நீதிபதி கூறினார்.

 இறுதியில், 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் எழுப்பினர். வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

முதலாவதாக, எந்த ஒரு சொத்தும் பயனாளரால் அல்லது நீதிமன்றத்தால் வக்பு என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக் கூடாது. இரண்டாவதாக, பிரச்சினைக்குரிய சொத்து தொடர்பான விசாரணையை மாவட்ட ஆட்சியர் தொடரலாம், ஆனால் புதிய சட்டத்தில் உள்ள பிரிவு பொருந்தாது. மூன்றாவதாக, வக்பு வாரியத்தின் அலுவல் வழி உறுப்பினர் பிற மதத்தவராக இருக்கலாம், ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டனர். அப்போது, கூடுதலாக 30 நிமிடம் தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை 17ம் தேதி(இன்று)  பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது  நீதிபதிகள் உத்தரவில்  கூறியதாவது:

சட்டங்களுக்கு வழக்கமாக தடை விதிப்பதில்லை.   வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில்  பதில் அளிக்க வேண்டும்.   வக்பு வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்க கூடாது.  வக்பு சொத்துக்களை வகை மாற்றம் செய்யக்கூடாது.  வக்பு தொடர்பாக 120  மனுக்கள் வரை தாக்கல் செய்ப்பட்டுள்ளன.  அனைத்தையும் விசாரிப்பது கடினம். எனவே  அவற்றில் 5 மனுக்களை மட்டுமே விசாரிக்க போகிறோம். வக்பு சொத்துக்கள் தற்போதைய நிலையே தொடரவேண்டும்.

இவ்வாறு  நீதிபதிகள் கூறினர்.

புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசின் சார்பில் மத்திய அரசின்  வழக்கறிஞா் உத்தரவாதம் அளித்தார்.

 

error: Content is protected !!