Skip to content

மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். எனினும், அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். 

அவர் பேசும்போது, இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill). அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. அதேநேரம், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா வகை செய்கிறது’என்றார்.

இதனால், மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்றுமாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.

திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசும்போது, “அரசியல் சாசனத்தை நீர்த்து போகச் செய்வதும், சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறித்து அவர்களை இழிவுபடுத்துவதும், இந்திய சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம். நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்றார்.

“மக்களவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாத கட்சிக்கு இன்று முஸ்லிம்கள் நினைவில் வந்திருக்கின்றனர். வக்பு சொத்துகளில் சுமார் 27 சதவீதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. அங்கு அடுத்த 18 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வரலாற்று சிறப்பு மிக்க மசூதியை இடித்து அயோத்தியை உருவாக்கினீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்திருந்தால், அயோத்தி குழுவில் ஒரு முஸ்லிம் உறுப்பினரைச் சேர்த்து இருப்பீர்கள்” என்று ஷிரோமணி அகாலி தள எம்.பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.

வக்பு மசோதா மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர். நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்ப்பதால் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் வாதங்களை பார்க்க முடிந்தது. இந்த சட்ட திருத்தம் அதற்காக கொண்டு வரப்படவில்லை. சிறுபான்மையினரிடையே தங்களது வாக்கு வங்கிக்காக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தவறான கருத்து பரப்பப்படுகிறது.

முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்கள் மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். வக்பு வாரியத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடை நிதி சார்ந்த விஷயத்தில் நிர்வாக ரீதியாக அவர்கள் பணிபுரிவார்கள். அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா, ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் தேவைக்காக நிதி செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் கவனிப்பார்கள். அனைத்துக்கும் கணக்கு இருக்கும். வெளிப்படைத்தன்மைக்காக ஓய்வுபெற்ற சிஏஜி அதிகாரிகள் கணக்கு விவகாரங்களை கவனிப்பார்கள் என அமித் ஷா சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்.

மத்திய வக்பு கவுன்சிலில் உள்ள 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும். மாநில வக்பு கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-க்கு முன்பு இருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.

வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.

வக்பு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்பு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

 

 

error: Content is protected !!