இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது. அதாவது தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸரேல் நடத்திய இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு நாடான லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்த நிலையில் அவற்றில் ஒன்று முந்தைய நாள் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வின் போது வெடித்தது கவனிக்கத்தக்கது.
இந்த வாக்கி டாக்கிகள் அனைத்துமே 5 மாதங்களுக்கு முன்னர் வாங்கப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் தான் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய பேஜர்களும் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய பேஜர்கள் அனைத்தும் தைவான் தயாரிப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் தைவான் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக பல்வேறு ஊடகச் செய்திகளும் குறிப்பிடுகிறது.
ஏற்கெனவே இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், பேஜர், வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறிய சம்பவம் இஸ்ரேல் – ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாக்கள் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச போர் நிலவர நிபுணர்கள் கணிக்கின்றனர்.