அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும் ஆசிரியர் இளவரசி நினைவு கலையரங்கத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.
நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும் ஆசிரியர் இளவரசி நினைவு கலையரங்கத்தினை திறந்து வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழாவானது அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட மருதூர், காட்டாத்தூர், கோவிந்தபுத்தூர் அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்றது. கடந்த வாரத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் பள்ளியில் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டேன். நேற்றையதினம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத்திற்குட்பட்ட தேப்பெருமாநல்லூர் அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. வரலாற்று மிக்க நிகழ்வில் பங்குகொள்ளும் வாய்ப்பாக இதனை பெருமையாக நாம் கருதவேண்டும்.
ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்பது சிரமமாகும். ஆனால் நூற்றாண்டுகளை பள்ளிகள் கடந்துள்ளது என்றால் எவ்வளவு நபர்களை உருவாக்கி இருக்கும், எத்தனை நபர்களின் வாழ்;க்கையில் முன்னேற்றத்தை அது ஏற்படுத்தி இருக்கும் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இது கல்வியின் மீதுள்ள அக்கறையினை காட்டுகிறது. வாலாஜாநகரம் என்பது தந்தை பெரியாரை மனதில் தாங்கியவர்கள் அதிகம் உள்ளவர்களை கொண்ட ஊர் ஆகும். அதன் விளைவாக பள்ளிக்கும் தந்தை பெரியாரின் பெயர் இடப்பட்டு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணத்திலும் தந்தை பெரியாரின் பெயர் நிலைத்திருக்கின்ற வகையிலும் அமைந்துள்ளது. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழ் சமூகத்தில் எல்லோருக்கும் கல்வி கிடைத்திருக்கின்ற வாய்ப்பு இருந்திருக்காது. சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 27 சதவீமாக உள்ளதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நம்முடைய தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 52 சதவீதமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியினால் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தற்போது 80 சதவீதத்தை கடந்துள்ளது. அதற்கு காரணம் புதுமைப்பெண் திட்டம் ஆகும். அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு
மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் இத்திட்டதால் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தால் அரசுப்பள்ளிகளுக்கு மாறிவருவதையும் காண முடிகிறது. மாணவிகள் கல்லூரி படிப்பை எட்டுவதற்கு இத்திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் என இது விரிவுப்படுத்தப்பட்டு மாதந்தோறும் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு இத்தகைய மகத்தான திட்டங்களை வழங்கியதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல: அது பெருமையின் அடையாளம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இப்பகுதியில் கல்விசேவை வழங்கி வரும் இப்பள்ளி நூற்றாண்டு கண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து ஆசிரியர் இளவரசி நினைவு கலையரங்கம் அமைத்து கொடுத்த ஆசிரியர் அருணுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொன்னாடை போற்றி கௌரவித்தார். மேலும், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, பரிசுகள் வழங்கி வரவேற்றார். இதேபோன்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மேனாள் கிராம கல்விக் குழுத்தலைவர் தெய்வ.இளையராஜன், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.