Skip to content
Home » வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Senthil

வக்பு சட்டத்திருத்த மசோதாவை  மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:  ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியல் அமைப்பின் அடிப்படை மீதே தாக்குதல் நடத்தியுள்ளது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை உறுப்பினர் ஆக்குவது மக்களின் மத உரிமை மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர் இடம்பெற முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா? குருவாயூர் தேவசம்போர்டு நிர்வாகத்தில் இந்து அல்லாத ஒருவருக்கு இடம்தர முடியுமா?.

மராட்டியம், அரியானா உள்ளிட்ட மாநில தேர்தலை மனதில் கொண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்துள்ளனர்.  அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அதன் அடிப்படையையே சிதைக்கிறீர்கள். தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு நாளை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.ஜெயின் சமூகம், பார்சிகளுக்கு எதிராகவும்  நடவடிக்கை எடுக்கும் . மத சுதந்திரம், கூட்டாட்சி தத்துவம் என்று அனைத்துக்கும் எதிரானது புதிய சட்டத் திருத்தம். நாட்டு மக்களை பிளவுபடுத்துவதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து திமுக எம்.பிக்கள் குழு தலைவர் கனிமொழி பேசியதாவது: மதசார்பற்ற நாடான இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறு. இஸ்லாமியர்களுக்கான வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தவரை எப்படி கொண்டு வர முடியும்? அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக செயல்படுகிறது மத்திய அரசு. கூட்டாட்சி தத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது. வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது.

அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. வக்பு வாரிய சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக முன்தேதியிட்டு சட்டத்தை அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? நாட்டின் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் எதிரானது வக்பு வாரிய சட்டத்திருத்தம் .

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பேசிய அனைத்து எதிர்க்கட்சி எம்.பிகளும், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு,  இந்த சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்.  மத சுதந்திரத்தில் நாங்கள் தலையிடவில்லை. 95ல் திருத்தம் செய்யப்பட்டது முழுமையாக இல்லை.  யாருடைய உரிமைகளையும் பறிக்க திருத்தம் கொண்டுவரப்படவில்லை.  நலிந்த மக்களுக்கு வலுவூட்டவே இந்த சட்ட திருத்தம். உரிமைகளை பெறாதவர்களுக்கு உரிமை வழங்கவே சட்டம் திருத்தப்பட்டுள்ளது’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!