வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் சட்டத்திருத்த மசோதா பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
கூட்டுக்குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி மேதா பிஸ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13 ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது தங்களது அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டத்திருத்த மசோதாவில் அநீதி இழைக்கப்படுகிறது என்று கூறினர்.
அனால் அவர்களது குற்றசாட்டுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து கூட்டுக்குழு அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத நபர்கள் 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
பிரச்சனைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து மாநில அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்தது. கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. அதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
அதே போல மாநிலங்களவையிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியது .
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அதில், வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம்நிறைவேற்றியது.
இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்திலும் வக்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை திமுக எம்.பி.க்கள் பதிவு செய்தனர். இஸ்லாமியரை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு வக்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது.
இலங்கை தமிழர்களையும் குடியுரிமை திருத்த சட்டம் வஞ்சிக்கிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை மூலம் பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கிறது.
இதே வரிசையில் வக்பு வாரிய திருத்தச்சட்டம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது. வக்பு வாரி திருத்தச்சட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். நீட், தேசிய கல்விக்கொள்கை அடித்தட்டு மக்களை பாதிக்கிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தத்தால் இஸ்லாமியர்கள் அச்சப்படுகின்றனர். இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக வக்பு சட்டத்திருத்தம் உள்ளது. வக்பு வாரியத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிக்கிறது திருத்தச்சட்டம் .
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் சட்டத்திருத்தத்தை எதிர்த்துள்ளன. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளது. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்ததை நாம் எதிர்க்க வேண்டும். வக்பு வாரியங்களின் சுயாட்சியை பாதிக்கும் வகையில் திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. வக்பு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம் நில அளவை ஆணையரிடம் இருந்து ஆட்சியருக்கு மாற்றப்படும். என தெரிவித்தார்.
இத்தகைய வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. அதிமுக, பாமக. மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. இதனையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே கேரள, கர்நாடக மாநில அரசுகள் தனித்தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.