தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டேசன் சாலையை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன். இவர் தனக்கு சொந்தமான வீடு பழுதடைந்ததை தொடர்ந்து அதில் புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டாதால் தனக்கு சொந்தமான காலிமனையை விற்க முடிவு செய்தார்.
இதற்காக அய்யம்பேட்டை சார்பதிவகத்தில் பத்திரப்பதிவு செய்ய அணுகிய போது பத்திரப்பதிவு செய்யாமல் பலமுறை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹாஜாநஜ்முதீன் தஞ்சை நகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து, ஹாஜாநஜ்முதீன் சொத்தை, விற்பனை கிரய ஆவணம் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டும். பதிவுக்கட்டணங்களில் ஏதாவது மாறுபாடு இருந்தால் அதனை அப்போதைய சார்பதிவாளர் மகாலட்சுமி தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டும். என உத்தரவிட்டனர். மேலும் சேவை குறைபாட்டிற்காகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், ரூ.5 லட்சம் இழப்பீடாகவும், வழக்கு செலவுத்தொகயைாக ரூ.10 ஆயிரமும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.