தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணாசிலை அருகே நிறைவுற்றது. இப்பேரணியில் சுமார் 100 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வாக்களிப்பது நமது உரிமை, வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன், தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழியை கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், வட்டாட்சியர் அரியலூர் ஆனந்தவேல், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.