வீட்டில் இருந்த படியே உடல் எடையை குறைக்க வேண்டுமா? டயட் இல்லாமல், உடலை கவர்ச்சியாக மாற்ற வேண்டுமா?… இதோ வந்துவிட்டது என தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து பயன்படுத்தி ஏமாந்தவர்கள் ஏராளம்… ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், இதே பாணியை பயன்படுத்தி, கவர்ச்சி விளம்பரம் ஒன்று சமூகவலைதளத்தில் உலா வந்துள்ளது.
அதில், உடலை எடையை குறைக்க வேண்டுமா? நீங்கள் அழகாக வேண்டுமா? எனக் கூறி, சில பயிற்சி வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் வழிமுறைகளை கூறியுள்ளார் மர்மபெண் பெண் ஒருவர்… விளம்பரத்தை நம்பி, அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட பெண்களிடம், இன்ஸ்டாகிராமில் பேசிய பெண், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், அழகிய கட்டுடலாக உடல் மாறும், அதனால் உங்களின் ஆடையில்லாத புகைப்படங்களை அனுப்பினால், அதற்கேற்ப உடற் பயிற்சிகளை பரிந்துரை செய்வோம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண் உடற்பயிற்சியாளர் தானே என நம்பிய சில பெண்களும், தங்கள் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். பதிலுக்கு சில உடற்பயிற்சி குறிப்புகளும் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளையில், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில், உங்களின் அந்தரங்க புகைப்படம் என்னிடம் உள்ளது. எனது எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என சில பெண்களை ஒரு நபர் மிரட்டியுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாவில் மிரட்டிய அந்த மர்மநபரால், அதிர்ச்சி அடைந்த பெண்கள், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.