Skip to content
Home » தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

  • by Senthil

தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை  துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார். இதில் தமிழியக்கம் அமைப்பின் நிறுவனரும், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர்  பேசியதாவது:

திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை 1856-லேயே முன்மொழிந்தவர் ராபர்ட் கால்டுவெல். தற்போது சிலர், திராவிடம் என்பது வேறு தமிழ்த்தேசியம் என்பது வேறு என்று பேசுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது திமுக, அதிமுக இரு கட்சிகள் அல்ல. திராவிட இயக்கத்துக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. தமிழ்ப் பண்பாட்டை உள்ளடக்கிய, வடமொழி இல்லாத தமிழ்த்தேசியத்தை உருவாக்கியது திராவிட இயக்கம்தான். 1937-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது இந்த இயக்கம்தான்.

சிந்து சமவெளி நாகரிகத்தை பறைசாற்றும் மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளன. அந்த இடங்களை நாம் எளிதாக சென்று பார்க்க முடியவில்லை. அவற்றை பார்ப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதோடு பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சியும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் தொல்லியல் இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா, `சிந்து சமவெளி நாகரிக சிறப்புகளும், கீழடி தொடர்புகளும்’ என்ற தலைப்பில் பேசும்போது, “வரலாறு என்பது உண்மைகளைச் சொல்ல வேண்டும். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

`சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிடர் பண்பாடு’ என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் சூர்யா சேவியரும், `சிந்து சமவெளி ஆய்வு வரலாற்றுத் திருப்பம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தனும், `சிந்து சமவெளியின் தொல்லியல் ஆய்வு’ என்ற தலைப்பில் கல்வெட்டு ஆய்வாளர் ஆ.பத்மாவதியும் உரையாற்றினர்.  முடிவில் உதவிப் பேராசிரியர் மு.வையாபுரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!