புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சியில் உள்ள பகுதியான குமாரமங்கலம் சக்தி நகர், தேவளி, வடுகப்பட்டிபுதூர் இறைவன் நகர், சக்தி நகர், நாஞ்சிலா நகர், ராமசாமி நகர், மற்றும் விவசாய நிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து நெல் நடவு செய்து உள்ளனார். இதில் சோளம், உளுந்து, கத்தரிக்காய் , தக்காளி வெண்டைக்காய், ஆகியவை பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் வயல்களில் வந்து குழி தோண்டி பயிர்களை சேதப்படுத்துகிறது என்றும் அங்கு வரும் பன்றிகள் வீட்டுக்குள்ளே நுழைந்து செல்வதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனே பன்றியை சுட்டு பிடிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை குமாரமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குமாரமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் குமாரமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கா விட்டால் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை சாலை மறியல் செய்வோம் என விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.