தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் முடப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் இன்று அதிகாலை தனது மகள் ஷாலினியுடன் (வயது 18) கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணி பூஜையில் பங்கேற்றுவிட்டு வழிபாட்டு தலத்தில் இருந்து வெளியே வந்த சந்திரய்யாவையும், அவரது மகள் ஷாலினியையும் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இடைமறித்தது. பின்னர் சந்திரய்யாவை தாக்கிய அந்த கும்பல் அவரின் கண்முன்னே மகள் ஷாலினியை காரில் கடத்தி சென்றது. இந்த கடத்தல் சம்பவம் அங்கு
பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் டிஎஸ்பி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் தனது காதலனுடன் கடந்த காலங்களிலும் ஓடியுள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணுக்கு 18 வயதாகி விட்டதால் அவரது காதலன் அவரை கடத்தி சென்றிருக்கலாம். கடத்தியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.