விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நடிகை திரிஷா அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா, கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானது. இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு வெளியானது. தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிம்பு மற்றும் த்ரிஷா கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
இரு மொழியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் பின்பு இந்தியில் ரீமேக்கானது. இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.’இங்க என்ன சொல்லுது…ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.
மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீட்டிலேயே இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் ஆயிரம் நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா. இந்த நிலையில், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.