பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் கமிட்டியின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக வினேஷ் போகத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது.
என்னுடைய அணிக்கும், என் சக இந்தியர்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும்… நாம் உழைத்துக் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அது இனி எப்போதும் இல்லாமல் போகலாம். விஷயங்கள் எதுவும் இனி முன்பு போல இல்லாமல் போகலாம். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.
எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்” இவ்வாறு வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.