ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தார்.. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்தது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்த போட்டி 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரவு முழுவதும் இந்திய அணியினரின் கடுமையான பிரயத்தனங்களையும் தாண்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 50 கிலோவையும் தாண்டி எடை கொண்டிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக இப்போதைக்கு வேறு விவரங்கள் ஏதும் குழுவினரால் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம். இப்போதைக்கு இனி கையில் உள்ள போட்டிகளில் இந்திய குழு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகத் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்றே அதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார். சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகளையும் விடிய விடிய தூங்காமல் மேற்கொண்டுள்ளார். பயிற்சியாளர்களும் அவரை உத்வேகப்படுத்தி உடல் எடை குறைப்பு பயிற்சியில் உதவியுள்ளனர். இருப்பினும் இன்று அவருக்கு எடை பரிசோதனை செய்தபோது 50 கிலோவை விட அதிகமாக இருந்துள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “வினேஷ் நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமிதம். ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேக அடையாளம் நீங்கள். இன்றைய பின்னடைவு வலியைத் தருகிறது. நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிக்கிறேன். அதேவேளையில், நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது. வலிமையுடன் மீண்டு வாருங்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதன் நீட்சியாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் இனி வினேஷ் போகத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னவென்று கேட்டறிந்தார். மேலும் வினேஷ் போகத்துக்கு தேவையான உதவிகளைச் செய்யும்படி பிடி உஷாவிடம் பிரதமர் மோடி அறி்வுறுத்தினார்.
இதற்கிடையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஊடகங்களை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.