இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இந்த விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி வழிபட்டனர்.
விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அருகம்புல் மாலை மாலை சாத்தி அவருக்கு பிடித்தமான அவல் பொரிகடலை மற்றும் கொழுக்கட்டை படையலிட்டு வழிபட்டனர்.
இந்த நிலையில் கரூர் மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் பொதுமக்கள் வைத்திருந்த 21 சிலைகள் மற்றும் இந்து முன்னணி சார்பில் 22 விநாயகர் சிலைகள் என 43 சிலைகளும் கரூர் 80 அடி சாலையில் ஒருங்கிணைத்து அங்கிருந்து மேளதாளத்துடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன், பெண்கள் முளைப்பாரி ஏந்தியவாறு ஊர்வலம் புறப்பட்டது.
கரூர் -கோவை சாலை, பேருந்து நிலையம் சாலை, ஜவகர் பஜார், ஐந்து ரோடு வழியாக சென்ற விநாயகர் ஊர்வலம் வாங்கல் காவிரி ஆற்றுக்கு சென்று விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்த ஊா்வலத்திற்கு 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.