தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றாகும் . கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாக சிறிய கிராமங்களிலும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊரின் முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வர். பின்னர் குறிப்பிட்ட நாளில் அந்த சிலைகளை ஊர்வலமாக
எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளில் விழா குழுவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மண் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம் பேட்டை பகுதியில் சதுர்த்தி விழாவிற்கான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.