கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இரவு வாங்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று இரவு, கரூர் 80 அடி சாலையில் இருந்து ஊர்வலமாக இந்து ஜவஹர் பஜார், ஐந்து ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றுக்கு காவிரி ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
கரூர், ஜவஹர் பஜார் கடைவீதி அமைந்துள்ள மார்க்கெட் பகுதி அருகே இந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்கள், பாடல்கள் இசைத்து, மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடிய படி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் ஒரு குழுவை சேர்ந்த இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்ததாக கூறப்படுகிறது. நேரம் அதிகமாக கடந்து விட்டதால், போலீசார் அதற்கு அனுமதி மறுத்து, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி உள்ளனர். அப்போது இந்து முன்னணி நிர்வாகி ஒருவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது, அவரை போலீசார் சிலர் அடித்ததாக கூறி, திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெராஸ்கான் அப்துல்லா தலைமையிலான அதி விரைவு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போராட்டத்திலிருந்து விளக்கிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினர். அதன்பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கிக் கொண்டதால், சிறிது நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீண்டும் அமைதியாக நடந்தது