இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக இஸ்லாமியர்கள் விநாயகருக்கு சீர் கொண்டு வந்த சம்பவம் பொள்ளாச்சியில் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபலமான மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில்
சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் தலைமையில் இஸ்லாமியர்கள் பலர் ஒன்று சேர்ந்து பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலை ஆகியவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்து விநாயகருக்கு செலுத்தினர்.
தி.மு.க. சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகராட்சி துணைத் தலைவர் கௌதமன், நகராட்சி கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, செந்தில், மணிமாலா, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் மாட்டு வியாபாரிகள் உள்ளிட்டோர் சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். இது குறித்து சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். பொள்ளாச்சியில் நடைபெறும் மாரியம்மன் பண்டிகை உள்ளிட்ட இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்கிறோம். அதேபோல் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்து சகோதரர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றனர். மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.