தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த போஸ் வெங்கெட், ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநரானார். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம், சாதி ஆணவ படுகொலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின் மேக்கிங், திரைக்கதை ரசிகர்களிடையே வெகுவாக பாராட்டை பெற்று, நல்ல வசூலையும் ஈட்டி வெற்றிப் பெற்றது. சில சர்வதேச திரைப்பட விழாவில் கன்னிமாடம் படம் இடம்பெற்று விருதுகளையும் அள்ளியது. அதனால், போஸ் வெங்கட்டின் அடுத்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கன்னிமாடம் படத்தை தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் புதிய படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘மா.பொ.சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ‘மா.பொ.சி’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் வெற்றிமாறன், அவரது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார்.
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரகனி, லால் மற்றும் நடிகர்கள் சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்களுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஆசிரியர் கெட்டப்பில் விமல் இருப்பதால், இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து பேசும் என்று தெரிகிறது.