விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (52). இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் ல் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கினார். அதற்கான ரசீதை தர மறுத்த ஓட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார். அந்த உணவுப்பொட்டலங்களை வீட்டிற்கு எடுத்து சென்ற ஆரோக்கியசாமி, அவற்றை முதியோருக்கு வழங்கினார். அதனை சாப்பிட்ட முதியவர்கள் அதில் ஊறுகாய் கூட வைக்கவில்லை என கூற.. அதேபோல் வாங்கிய 25 சாப்பாடு பொட்டலங்களிலும் ஊறுகாய் வைக்காததால் சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்ற ஆரோக்கியசாமி உரிமையாளரிடம் இது குறித்து கேட்டபோது அவர் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. இதனால் 25 சாப்பாடுக்கு ஊறுகாய் வைக்காததால் 25 ரூபாயை திரும்பி தர வேண்டும் என ஆரோக்கியசாமி கேட்டுள்ளார். ஆனால், ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 30,000, வழக்கு செலவிற்கு 5,000 ரூபாய், ஊறுகாய் பாக்கெட்டுகளுக்குரிய 25 ரூபாய் எல்லாவற்றையும், 45 நாட்களில் வழங்க ஓட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.