மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 500 கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் மத்திய அரசு சுரங்க ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்யாமல் உள்ளது.
இதனை கண்டித்து இன்று மேலூர் அருகே உள்ள நரசிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கண்டன பேரணி நடத்தினர். நரசிங்கப்பட்டியில் இருந்து பேரணியாக பல்லாயிரகணக்கான மக்கள் மதுரைக்கு புறப்பட்டனர். போலீஸ் அனுமதி மறுத்த நிலையிலும் அவர்கள் தடையை மீறி புறப்பட்டனர்.
காலையில் புறப்பட்ட பேரணி பிற்பகல் 3 மணி அளவில் மதுரை தமுக்கம் மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் மத்திய அரசை கண்டித்து பேசி வருகிறார்கள். இந்த பேரணி போராட்டத்தில் பல்லாயிரகணக்கான பெண்களும் பங்கேற்று உள்ளனர். அவர்கள் தமுக்கம் மைதானததில் உள்ள தமிழன்னை சிலையை சுற்றி அமர்ந்து போராடி வருகிறார்கள்.