சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கூட்டம் தொடங்கியதும், ஜோதிமணி எம்.பியும் அங்கு வந்தார். கூட்டத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகைள பார்வையிட்டார். கூட்டம் முடியும் நேரம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்கள் சிலர், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தல் வந்தால் தான் உங்களுக்கு எங்கள் ஞாபகம் வருமா,வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை . நன்றி சொல்லக் கூட நீங்க வரவில்லை என்று காட்டமாக கேட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜோதிமணி எம்.பி, அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து இருக்கிறேன்,கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன்.
நீங்கள் வேண்டும் என்றே என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட மக்களிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.
அப்போது ஒருவர், போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா?எம்பி என்கிற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். கிராம சபை கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் கேள்விகேட்ட அந்த நபரை அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர். பின்னர் கூட்டமும் நிறைவு பெற்றது. ஜோதிமணியும் கிளம்பி சென்றார்.
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம் பி ஜோதி மணியிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.